கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சுந்தர் என்பவர் விதைகள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 10ஆம் தேதி நள்ளிரவில் சுந்தரின் கடையில் புகுந்து ரூ.4.70 லட்சத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரில் பண்ருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை குறித்து துப்பு கிடைக்காததால், போலீசார் விசாரணையை விரிவுப்படுத்தினர். அதன்படி, திண்டுக்கல் அருகே ஒரு மர்ம நபரின் நடமாட்டம் உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசாரிடம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் சிக்கினார்.
அவரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் சாகுல் ஹமீது மீது மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், சாகுல்ஹமீதுக்கு மதுரையில் ஒரு மனைவியும், திருவனந்தபுரத்தில் ஒரு மனைவியும் உள்ளனர். மருந்து விற்பனை பிரதிநிதியான சாகுல் ஹமீது இரவில் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சென்னை சென்ற அவர், அங்கிருந்து பண்ருட்டி சென்று உரம் மற்றும் பூச்சி மருந்து கடையில் திருடியிருக்கிறார்.
திருடிய பணத்தில் ரூ.1.50 லட்சம் மட்டுமே இருந்த நிலையில் மீதி பணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, திருடிய பணத்தில் கேரளாவில் சொகுசு விடுதியில் அரை எடுத்து தங்கி, நடிகைகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளதாக சாகுல் ஹமீது வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் பணம் செலவாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர் திருடிய பணத்தை நடிகைகளிடமே கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். 60 வயதில் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க கொள்ளையடித்த விவகாரம் போலீசாருக்கு அதிர்வை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.