வருங்கால முதல்வர் என்று தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்தை குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, இருமொழிக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை முதலே நிர்வாகிகள் குவிந்தனர். தவெக தலைவர் விஜய்யை வரவேற்கும் விதமாக வழி நெடுகிலும் டிஜிட்டல் பேனர்கள், தவெக கொடி மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
தவெகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ”தளபதி அவர்களை பொதுக் குழுவுக்கு அழைத்துவரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசான், தவெக பொதுச் செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சரை வருக வருக என வரவேற்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை போஸ்டர் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள புஸ்ஸி ஆனந்த், “2026-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நான் கட்சியில் ஒரு சாதாரண தொண்டன். வேண்டுமென்றே சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டர் ஒட்டியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த போஸ்டர் தொடர்பாக பேசிய இசிஆர் சரவணன், தனக்கும் இந்த போஸ்டருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்றார். இது போன்ற கீழ்தரமான செயல்களில் நாங்கள் ஈடுபட மாட்டோம். எங்களுக்கு தலைவர் விஜய் தான். நான் 30 ஆண்டுகாலமாக விஜயுடன் இருக்கிறேன். வேறு கட்சியை சேர்ந்த யாராவது இப்படி செய்திருக்கலாம், வேண்டும் என்றே இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு உள்ளனர். நான் சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவன். என் வளர்ச்சியை பிடிக்காமல் யாரோ செய்திருக்கின்றனர். முதுகில் குத்தாதீர்கள், முடிந்தால் நேரா வந்து பாருங்கள். 2026-ல் சந்திக்க தயாராக இருக்கிறோம்’ என பேசினார்.
Read more: தடைகளை தாண்டி ரிலீசான வீர தீர சூரன் வொர்த்தா..? இல்லையா..? திரை விமர்சனம் இதோ..!