டெல்லியில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
ஜி 20 உச்சி மாநாட்டுக்காக டெல்லி மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு கடந்த வாரம் திடீரென கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால், ஜோ பைடன், உச்சி மாநாட்டில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதனால் ஜோ பைடனின் இந்திய பயணமும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லி நடைபெறும் ஜி 20 மாநாட்டை முன்னிட்டு 500 வகையான உணவு வகைகள் தயார் செய்யப்பட உள்ளன. இந்த உணவு வகைகளை தாஜ் ஓட்டல் நிர்வாகம் தயாரிக்கிறது. அசைவ உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகள், தினை உணவுகள் உள்ளிட்டவை உலக தலைவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தென் இந்திய மசால் தோசை, பெங்காலி ரசகுல்லா, சிறப்பு தினை தாலி உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கப்பட உள்ளன. மேலும் இந்திய பாரம்பரிய இனிப்பு வகைகள், பானிபூரி, பேல்பூரி, சமோசா, வடபாய் உள்ளிட்டவைகளும் தயாரிக்கப்படுகின்றன.