விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே காதலனை கத்தியால் குத்தி விட்டு 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவனும், அதே வகுப்பில் பயின்று வரும் மாணவியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் நேற்று இரவு விக்கிரவாண்டி அருகே உள்ள செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
மேலும் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த சிறுவனும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியும் தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.