சமையல் என்பது ஒரு கலை, அதை ரசித்து செய்தால் தான் உணவு சுவையாக இருக்கும் என்பார்கள். இது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும், உணவிற்கு முக்கியமான ஒன்று, உணவில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். ஆம், நாம் என்ன தான் ஒரு உணவை பார்த்து பார்த்து செய்தாலும், அதில் சேர்க்கப்படும் மசாலா சரியில்லை என்றால், உணவின் சுவை குறைந்து விடும். அதிலும் குறிப்பாக அசைவ குழம்புகள் சில நேரங்களில் சலித்து விடுவதற்கு காரணம் சரியான மசாலா கலவை இல்லாததுதான். ஆனால் நீங்கள் இந்த ஒரு கரம் மசாலா பொடியை வீட்டிலேயே செய்து வைத்துக் கொண்டால் கட்டாயம் நீங்கள் வைக்கும் குழம்பு, தெரு வரைக்கும் வாசனை வீசும்..
இந்த கரம் மசாலா பொடி செய்ய தேவையான பொருட்கள்,
மல்லி – 1 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த வத்தல் – 10
மிளகு – 1 டீஸ்பூன்
பட்டை – 2
பிரியாணி இலை – 2
ஜாதி பத்திரி – 3
கிராம்பு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 10
நட்சத்திர சோம்பு -8
ஜாதிக்காய் – ஒன்று
கருப்பு ஏலக்காய் – 3
செய்முறை: இந்த மசாலா செய்ய முதலில் நீங்கள் ஒரு கடாயில் மல்லி சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த மல்லியை தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இப்போது பெருஞ்சீரகம், சீரகம் சேர்த்து ஒன்றாக வாசனை வரும் வரை வறுத்து விடுங்கள். இதையும் தனியாக எடுத்து வைத்து விட்டு, இப்போது அதே கடாயில் மிளகு சூடேறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே போல் வத்தல் மற்றும் மிளகை வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி நட்சத்திர சோம்பு, பிரியாணி இலை ஆகிய பொருள்களை எல்லாம் ஒன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். கடைசியாக, ஜாதிக்காய் மற்றும் கருப்பு ஏலக்காயை ஒன்றாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, வறுத்த அனைத்து பொருள்களையும் நன்கு ஆற வைத்து விடுங்கள். பின்னர், ஆறிய பொருள்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து விடுங்கள்.. அவ்வுளவு தான் ஊரே மணக்கும் வாசனையில் கரம் மசாலா பொடி தயார். இந்த பொடியை நீங்கள், ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
Read more: உடல் எடை குறைய வேண்டுமா..? அப்போ இரவில் அதை செய்யாதீங்க..!