சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு, இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதனால், நாம் அனைவரும் அதனை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். இந்நிலையில், பூண்டு விற்பனை குறித்த பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்கு பெயர் பெற்ற நாடான சீனா, முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகளை போலவே டூப்ளிகேட் பொருட்களை தயாரித்து வழங்குவதில் புகழ்பெற்றது. இதற்கு விவசாய பொருட்களும் விதிவிலக்கல்ல. இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை எண்ணிலடங்காத நன்மை கொண்ட பூண்டு விளைச்சலில் முதன்மை நாடாக உள்ளது சீனா. ஆனால், சீனாவில் விளைவிக்கப்படும் பூண்டு நம் உடலுக்கு ஆபத்தானது என்பது கண்டறியப்பட்ட நிலையில், நாட்டு மக்களின் நலன் கருதி சீன நாட்டின் பூண்டுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது.
இருப்பினும், சீன பூண்டின் விலை மிகவும் குறைவு என்பதால், அதிக லாபம் கிடைக்க, இந்தியாவுக்கு கள்ளச்சந்தையில் கொண்டுவரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பூண்டில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், சீன பூண்டில் 6 மாதங்களுக்கு பூஞ்சை ஏற்படுவதை தடுக்க மெத்தில் புரோமைடு கொண்ட பூஞ்சைக் கொல்லியைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். மேலும், தீங்கு விளைவிக்கும் குளோரின் மூலம் வெளுக்க வைக்கப்படுகிறது. இதனால், பூண்டு நீண்ட காலங்களுக்கு வெள்ளையாகவும் மற்றும் பிரெஷ்ஷாக இருப்பது போல் தோன்றும்.
பூண்டு வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை…
சீன பூண்டு அளவில் பெரியது. அதன், தோல்களில் நீலம் மற்றும் ஊதா நிற கோடுகள் இருக்கும். அத்தகைய பூண்டை சந்தையில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பூண்டில் வைட்டமின்கள் சி மற்றும் பி6, மாங்கனீசு மற்றும் செலினியம் ஆகியவை உள்ளன. சிறந்த ஆக்ஸிஜனேற்றியான பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், நச்சு இரசாயனங்கள் அடங்கிய சீன பூண்டு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.