உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 3ம் இடத்துக்கு முன்னேறினார்..
ப்ளூம்பெர்க் நிறுவனம் உலகப் பணக்காரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில், லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி, வணிக அதிபரான கௌதம் அதானி இப்போது உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற இடத்திற்கு முன்னேறி உள்ளார்.. எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெஃப் பெசாஸ் 2-வது இடத்திலும் உள்ளனர்..
இந்த பட்டியலில் 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி 3வது இடத்தை பிடித்துள்ளார்.. ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மொத்தம் 91.9 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்த பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் இருக்கிறது. துறைமுகங்கள், மின்சாரம், பசுமை ஆற்றல், எரிவாயு, விமான நிலையங்கள் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும். அதானி குழுமம் இப்போது 5ஜி அலைக்கற்றைக்கு ஏலம் எடுத்த பிறகு தொலைத்தொடர்பு துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது.