திருச்சி மாவட்டம் முசிறி அருகே 2 சகோதரிகள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.
ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி மற்றும் வேம்பு என்ற 2 பெண் குழந்தைகளும் 1 மகனும் இருந்தனர். இந்நிலையில் பழனிச்சாமியின் வயலில் அறுவடை நடைபெற்று வந்திருக்கிறது. அறுவடையை முன்னிட்டு வயலுக்குச் சென்ற தாயுடன் தர்ஷினி மற்றும் வேம்பு இருவரும் சென்று உள்ளனர்.
வயலுக்குச் சென்ற 2 சகோதரிகளும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். 30 அடி ஆழமுள்ள கிணற்றில் வேம்பு குதித்திருக்கிறார். அவர் நீரில் மூழ்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த தர்ஷனியும் தன் சகோதரியை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்து நீரில் மூழ்கி இருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் வயலில் வேலை செய்தவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 சகோதரிகளையும் சடலமாக மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமிகள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி இரண்டு சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சாவிலும் இரண்டு சகோதரிகள் இணைபிரியாமல் சேர்ந்து இருந்ததாக ஊர் மக்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.