விஜய் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான ‘கோட்’ திரைப்படம், மூன்று நாட்களில் ரூபாய் 280 கோடியில் இருந்து ரூபாய் 300 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட மேலும் பலர் நடித்திருந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு கோட் படம் ரிலீஸானதால், முதல் வாரம் முழுவதும் டிக்கெட் புக்கிங் களை கட்டியது. செப் 5ஆம் தேதியான வியாழன், வெள்ளி (நேற்று), சனி (இன்று), ஞாயிறு (நாளை) ஆகிய தினங்களில் கோட் படத்தின் டிக்கெட்டுகள் முழுமையாக புக் ஆகியுள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் 700-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உட்பட வட இந்திய மாநிலங்களிலும் கோட் வெளியானது.
கோட் திரைப்படம் முதல் நாளில் ரூ.126 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2 நாட்கள் முடிவில் கோட் படத்தின் வசூல் 200 கோடியை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று, மீண்டும் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதாவது படம் இந்தியாவில் மட்டும் ரூபாய் 35 கோடிகளை வசூல் செய்திருப்பதாகவும், உலகம் முழுவதும் 100 கோடிகளை அள்ளியிருக்கும் எனவும் கூறப்படுகின்றது. இதனால் படம் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 280 கோடியில் இருந்து ரூபாய் 300 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Read more ; சிகாகோவில் பட்டு வேட்டி, சட்டையில் வந்த முதலமைச்சர் ஸ்டாலின்…!