இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், 175வது நிறுவன தினத்தையொட்டி ஓய்வுபெற்ற அதிகாரிகளை கௌரவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொது துணை இயக்குநர் அஜய்குமார் பேசுகையில், “திருவண்ணாமலை உள்ளிட்ட சில இடங்களில் பூமிக்குள் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அதுகுறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.
மேலும் இந்த விழாவில் பங்கேற்ற புவியியல் ஆய்வு மைய இயக்குநர் விஜயகுமார் பேசுகையில், “மழை மற்றும் வெயிலைப் போலவே, நில அதிர்வும் ஒரு இயற்கையான நிகழ்வு. சமீபகாலமாக நில அதிர்வு பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், கருங்கல் பாறைகளின் அடிப்படையில் அமைந்துள்ள சென்னை நகரத்தில் இதனால் பெரிதாகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், கடலோர பகுதிகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, அங்குள்ள கட்டிடங்கள் அதிக உயரம் கொண்டிருக்கக்கூடாது, ஏனெனில் அவை நில அதிர்வினால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
மேலும், தமிழகத்தின் சில பகுதிகளில் தங்கம் மற்றும் பிற கனிம வளங்கள் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மொபைல் போன் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் ‘லித்தியம்’ மினேரல் சில இடங்களில் இருப்பதாகவும், அதுகுறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும்” அவர் தெரிவித்தார்.
நிலச்சரிவு அபாயம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்: தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை பற்றிய தகவல்கள் அரசுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு கௌரவ விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், புவியியல் சார்ந்த அறிவுறுத்தல்களை வழங்கும் வகையில், ஐந்து அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.