மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 2022 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசில் உள்ள 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெற முடியும். நாட்டில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் நிலைமையை மோசமாக்கியுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரலில், இந்தியாவில் பணவீக்கம் பல ஆண்டு உச்சத்தைத் தொட்டது. இதனால் தான் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் விரும்புகின்றனர்.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் தேதி வரையிலான நிலுவைத் தொகையை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அடிப்படைச் சம்பளமாக ரூ.50,000 பெறுபவர் ரூ.2,000 கூடுதலாகப் பெறுவார். அதேபோல், 5 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், ரூ.50,000 அடிப்படை சம்பளம் உள்ளவருக்கு மாதம் ரூ.2,500 கூடுதலாக கிடைக்கும்.