சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவத் தொடங்கிய பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகழுவுவது ஆகியவை நியூ நார்மலாக மாறிவிட்டன.. குறிப்பாக அதிக கூட்டம் கூடும் இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால், மக்கள் அதிகமாக கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது..
அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்த தேவசம்போர்டு உயர்மட்ட கூட்டம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டது.. அதன்படி, அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.