30,000 மின் இணைப்புகளை வரும் 2025 மார்ச் மாதம் வரை வழங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.7,280 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. இதற்கான தொகையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. ஆண்டுதோறும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
விவசாய இணைப்பு கேட்டு கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் வரை 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனால், அந்த ஒரே நிதியாண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகளும், 2022-23ஆம் ஆண்டில் 50 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டில் 50,000 மின் இணைப்பு வழங்க அரசு வழங்கிய அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. எனவே, அந்த ஆண்டில் வழங்கியது போக, இதர விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்க அரசிடம் மின்வாரியம் அனுமதி கேட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள 30 ஆயிரம் மின் இணைப்புகளை வரும் 2025 மார்ச் மாதம் வரை வழங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.