குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில், மே 24ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு, எப்போது தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம், 103 அடிக்கு மேல் உள்ளது. நீர் இருப்பு 69.82 ஆக இருக்கிறது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 850 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து, ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. உரிய காலத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் உழவுப் பணிக்கு ஆயத்தமாகின்றனர்.