குடும்ப அட்டைதாரர்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலனடைந்து வருகின்றனர். அதேபோல, ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவைகள் குறித்தும் தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில், மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்துக்கான குறை தீர்ப்பு முகாம் எப்போது என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்களில் வழங்கப்படும் பொருள்களில் குறைபாடுகள் இருந்தால், அதுகுறித்த புகாா் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்துக்கான மாதாந்திர குறைதீா் முகாம் சென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. நகரில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடா்பான தகவல்களைப் பெறுவதுடன், குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம். மேலும், ரேஷன் பொருள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். அதனை அங்கீகரிக்கப்பட்ட நபா்களிடம் கொடுத்து பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இந்த 5 விஷயத்தையும் மறந்துறாதீங்க..!! இல்லைனா சிக்கலில் மாட்டிப்பீங்க..!!