முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இத்திட்டம், அடுத்தக்கட்ட விரிவாக்கத்துக்கு நகர்கிறது. அதாவது, வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். 31,000 பள்ளிகளில் படிக்கும், 15 லட்சம் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்போவதால், அதற்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான ரவை, சம்பா ரவை, சேமியா ஆகியவை தலா 617 டன் கொள்முதல் செய்யும் பணியில், தமிழக நுகர்வோர் கூட்டுறவு இணையம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போதைக்கு “பாம்பினோ” என்ற நிறுவனத்திடம் இருந்து சேமியா, வறுத்த ரவையும், அனில் நிறுவனத்திடம் இருந்து சம்பா ரவையும் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவை ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு தேவை என்று கணக்கிட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி நடந்து வருதாக சொல்லப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகளை கொண்டு உணவு தயாரிக்கும்படி சத்துணவு ஆய்வாளர்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில் இன்னொரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் அளவு மற்றும் நேரம் ஆகியவற்றை, சத்துணவு பணியாளர்கள் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாணவர்களுக்கும் எவ்வளவு உணவு வழங்கப்படுகிறது? உணவு பரிமாறும் நேரம் என்ன? என்பது குறித்த அனைத்து விவரங்களை அரசு கேட்டுள்ளதாம். மேலும், சத்துணவு பணியாளர்கள் சமையல் தொடங்குவதை காலை 6 மணிக்குள் பதிவேற்றம் செய்யும்படியும், காலை 8.15 மணிக்குள் சமையல் செய்து முடிந்ததையும் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
காலை 9 மணிக்குள் மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்றும், 11 மணிக்குள் எத்தனை மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது? என்பது குறித்தும் மொத்த விவரங்களையும் பதிவு செய்திருக்க வேண்டுமாம். தமிழக அரசின் இந்த அறிவிப்பானது, மாணவர்களையும், பெற்றோர்களையும் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் சேர்த்தே குளிர வைத்துள்ளது.