தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்காக புதிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது புதிய பஸ்கள் வாங்குவதற்கான அரசாணையையும் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார்.
ஒரு பேருந்திற்கு ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கு 100 பேருந்துகள், மதுரை மாவட்டத்திற்கு 220 பேருந்துகள், கோவை மாவட்டத்திற்கு 120 பேருந்துகள், கும்பகோணம் மாவட்டத்திற்கு 250 பேருந்துகள், விழுப்புரம் மாவட்டத்திற்கு 180 பேருந்துகள், நெல்லை மாவட்டத்திற்கு 130 பேருந்துகள் என்று மொத்தமாக தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.