2024 ஆம் ஆண்டு ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் ஆண்ட்ராய்டு(Android) குறித்த 6 அனுபவங்களை வழங்க இருப்பதாக கூகுள்(Google) அறிவித்துள்ளது. மேலும், கூகுள் பிரதிநிதி ஒருவர் AI எவ்வாறு உலகை மாற்றியமைக்க உள்ளது என்பது பற்றி விவாதிக்க இருக்கிறார்.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் 6 ஆண்ட்ராய்டு அனுபவங்களை காட்சிப்படுத்த இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. சமீபத்திய AI தொழில்நுட்பங்கள் மற்றும் பல சாதனங்களின் அனுபவங்களை ஆண்ட்ராய்டு சுற்றுச்சூழலில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் பயனர்களுக்கு பகிர இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் அறிமுகப்படுத்தி இருக்கும் ஆறு அனுபவங்களில் ஒன்று சர்க்கிள் சர்ச் என்பதாகும். இது ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு சிறப்பு அனுபவம். இந்த வசதி பயனர்கள் தங்கள் மொபைலில் ஆப்ஸை மாற்றாமல் எங்கு வேண்டுமானாலும் தேடும் ஆப்ஷனை தருகிறது. இந்த சர்க்கிள் சர்ச் வசதியில் நீங்கள் ஒரு இடத்தை வட்டமிடுவதன் மூலம் அல்லது அந்த இடத்தில் டேப் செய்வதன் மூலம் அங்கு இருக்கக்கூடிய சுற்றுலா தளங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் உணவகங்களை பற்றிய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த வசதி ஆண்ட்ராய்டு பிரீமியம் போன்களான பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ மற்றும் சாம்சங் S24 ஆகியவற்றில் கிடைக்கிறது.
இந்த மாநாட்டில் கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் மற்றொரு சிறப்பு அம்சம் செல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோவில் வழங்கப்படும் பெஸ்ட் டேக் வசதியாகும். இது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதி பயனர்கள் குரூப் போட்டோ எடுக்க பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் ஒரு சில குரூப் புகைப்படங்களை எடுக்கும்போது பெஸ்ட் டேக் அனைவரின் சிறந்து வெளிப்பாடையும் ஒரே டேக்கில் புகைப்படமாக எடுத்துக் கொடுக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் கூகுள் பிக்சல் ஃபோல்டின் சில சிறப்பம்சங்களையும் காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் பிக்சல் ஃபோல்டின் dual screen மொழிபெயர்ப்பையும் காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த சிறப்பம்சம் நேரடியான மொழிபெயர்ப்புகளை உடனடியாக வழங்கி மொழித் தடைகள் இல்லாமல் அனைவருடனும் கலந்துரையாடும் வாய்ப்பை வழங்குகிறது. இதனைப் பயன்படுத்தி ஒருவர் மொழி தடைகள் இன்றி மற்றவர்களுடன் உரையாடுவதை நீங்கள் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் காணலாம் எனவும் கூகுள் தெரிவித்து இருக்கிறது. மேலும் இது பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
கூகுள் தனது ஆண்ட்ராய்டு ஆட்டோவில் சில புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது. இது 2024 மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் BMW i5 M60 மூலம் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் புதிய செய்தி வசதிகளை பெற முடியும். AI தொழில்நுட்பத்தின் மூலம் நீண்ட உரைகளை சுருக்கி நமக்கு தேவையான பதில்களை மட்டும் பரிந்துரைக்கும் வகையில் இந்த வசதி அமைந்திருக்கிறது. இதனால் பயனர்கள் தங்கள் வாகனங்களில் பயணிக்கும் போது பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் தொலைத் தொடர்பிலும் இருக்க முடியும்.