80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக இருந்து பின் அரசியல் வாதியாக மாறிய ஜெயசுதா தற்போது தென்னிந்திய நடிகர்களுக்கு இந்திய அரசாங்கம் உரிய அங்கிகாரத்தை வழங்குவதில்லை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால் திரையுலகில் பல தசாப்தங்களாக பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கு அதிலும் குறிப்பாக தென்னிந்திய திரைப்படத் துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு அவர்களின் பணிக்கான எந்த ஒரு உரிய அங்கீகாரமும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
கங்கனா ரணாவத் ஒரு அற்புதமான நடிகை எனவே அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது பற்றி கவலை படவில்லை என தெரிவித்துள்ள அவர், கங்கனா 10 படங்கள் நடிப்பதற்குள் அந்த விருதைப் பெற்றார் என தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் பல படங்களில் பணியாற்றியும் இன்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகத்தினரை இந்திய அரசாங்கம் பாராட்டுவதில்லை என்று நான் வருத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.