புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில்தான் புதுச்சேரிக்கு அந்தஸ்து கோரி போராடும் குழுவினர் முதலமைச்சர் ரங்சாமியை சந்தித்து, இந்த கோரிக்கை தொடர்பாக மீண்டும் வலியுறுத்தினர்.
அப்போது, அந்த குழுவினர் முன்பாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி “கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு நமக்கு மரியாதையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. உண்மையான விடுதலை புதுச்சேரிக்கு இன்னும் கிடைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் யாருக்காவது ஏதாவது செய்து தர வேண்டும் என்றால் முடியவில்லை. தினமும் மன உளைச்சல்தான். இதற்கு ஒரே தீர்வு மாநில அந்தஸ்து மட்டுமே ஆகும்” என்று பேசினார்.