கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த நிலையில், சட்டசபையில் மதுவிலக்கு திருத்த மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 18, 19ஆம் தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் 66 பேர் வரை உயிரிழந்தனர். மற்றவர்கள் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. இதனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் சட்டசபையில் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும், அதை விற்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா 2024 என்பது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்ட திருத்த மசோதா ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா 2024க்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த சட்டத்திருத்த மசோதா சட்டமாகும்போது கள்ளச்சாராயம் தயாரித்து விற்றால் ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். இதுதவிர அவர்களின் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : செம குட் நியூஸ்..!! தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!