தமிழ்நாட்டில் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளன. அதனால் பல்வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு முன்பு அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பதவி உயர்வு வழங்கப்படாது என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் இருந்தும் கூட தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படவில்லை.
நீதிமன்றத்தின் உத்தரவால் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியும் என்று தற்போது பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.