ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகள் ஆகாது என அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, பவன் மற்றும் ஆகாஷ் என்ற இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் POCSO சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆகாஷ் சிறுமியின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து, ஒரு கால்வாய்க்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்ததால். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை விட்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த, நீதிமன்றம் இதை பாலியல் வன்கொடுமை முயற்சி என்று கூறியது. விசாரணை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஆகாஷ் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், சிறுமியை இழுத்துச் செல்ல முயன்று, அவரது பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்தார் என்பதே. குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த செயலால், பாதிக்கப்பட்டவர் நிர்வாணமாகிவிட்டார் என்று சாட்சிகள் கூறவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஒரு சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பது, அவரின் ஆடைகளை கலைத்து இழுக்க முயற்சிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகளாகாது’ எனத் தெரிவித்து அவர்கள் மீது போடப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.
Read more: மோடியா.. ராகுல் காந்தியா.. யார் நேர்மையானவர்கள்..? எலான் மஸ்கின் Grok அளித்த பதில்..