காற்றின் குறியீடு மோசமானதால் டெல்லியில் டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தலைநகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. மோசமான காற்று மாசுபாட்டுடன் தேசிய தலைநகரின் பல பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக மாறியுள்ளது. தலைநகரில் காற்றின் தரக் குறியீடு 364 ஆக மாறியுள்ளது. இது வரும் நாட்களில் மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான காற்று மாசுபாட்டை அடுத்து, தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தரத்திற்கான ஆணையம், டெல்லி-NCR இல் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதன் படி, டெல்லிக்குள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மற்றும் அனைத்து சிஎன்ஜி, மின்சார லாரிகள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர, டெல்லியில் பதிவு செய்யப்பட்ட டீசல் மூலம் இயக்கப்படும் நடுத்தர வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் டெல்லியில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.