கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி பெரும் தாக்கத்தையே ஏற்ப்படுத்தியது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக குறைந்திருந்தால் நோய்ப்பரவல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை.
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராடியதால் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்னர், நகரங்களில் வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால், வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனாவில் பரவிவரும் பிஎப் 7 எனப்படும் இந்த வைரஸ் மற்ற இடங்களில் பரவுவதை விட சீனாவில் வேகமாகப் பரவுகிறது. மேலும் ஒமைக்கிரானின் மிகவும் பரவக்கூடிய சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. தற்போதைய பரவி வரும் வைரஸ் பாதிக்கப்பட்டவரிடமிருந்து சராசரியாக 16 பேருக்கு நோயை பரப்புவதாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
சீனாவில் பண்டிகை காலங்கள் வர இருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். மேலும் சீனாவில் சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிமுகரித்துள்ளதாகவும், வழக்கமாக ஒரு நாளைக்கு 30 அல்லது 40 உடல்கள் மயானத்துக்கு வரும் நிலையில் தற்போது 200க்கு மேற்பட்ட உடல்கள் மயானத்துக்கு வருகின்றன என்று கூறப்படுகிறது. மேலும் சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் இவாலுவேஷன் புதிய கணிப்புகளின்படி, சீனாவில் கொரோனா பாதிப்பால் 2023ஆம் ஆண்டுக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படலாம் என கூறப்பட்டு உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சத்தை எட்டும் என்றும்,, அப்போது இறப்புகள் 3,22,000 ஐ எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அதற்குள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது..
சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கையானது வைரஸின் முந்தைய மாறுபாடுகளை கையாண்டதில் பயனுள்ளதாக இருந்திருக்கலாம், ஆனால் வேகமாக பரவும் ஒமிக்ரான் மாறுபாடு பரவலில் அந்த கொள்கை பயனளிக்காது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் மக்கள்தொகையில் 60% பேர் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.. குறைவான செயல்திறன் கொண்ட தடுப்பூசிகளின் பயன்பாடு மற்றும் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே குறைந்த தடுப்பூசி கவரேஜ் ஆகியவை கொரோனா பரவலுக்கு முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகிறது.