கர்நாடக மாநில அரசு மருத்துவமனையில் பிரசவ வலியில் அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாததால், வீட்டுக்கு சென்று இரட்டை குழந்தையை ஈன்றெடுத்த அவர், குழந்தைகளுடனே பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 30 வயது பெண் கஸ்தூரி. இவர் கர்நாடகா மாநிலம் துமகூருவில் உள்ள குடிசைப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த புதன்கிழமை இரவு பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர். வலியோடு மருத்துவமனைக்கு சென்ற அவரிடம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஆதார் அட்டை கேட்டுள்ளார். எந்த அடையாள அட்டையையும் எடுத்து வரவில்லை என்று கூறி மருத்துவர் அந்த பெண்ணை பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிரசவ வலியில் பெண் துடிப்பதை கண்டும் மனம் இறங்காத மருத்துவர், அவரை சிகிச்சைக்கு அனுமதிக்காததால் அதே வழியோடு கஸ்தூரி வீட்டுக்கு திரும்பி உள்ளார். வீட்டுக்கு வந்த சில நிமிடங்களில் கஸ்தூரிக்கு வலி மேலும் அதிகரித்தது. அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 குழந்தைகளை பெற்றெடுத்தார் கஸ்தூரி. ஆனால், தான் பெற்ற இரட்டை குழந்தைகளை காண்பதற்கு கஸ்தூரிக்கு கொடுத்து வைக்கவில்லை. மருத்துவர் உதவி இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் நடைபெற்றதால் கஸ்தூரிக்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. சிறிது நேரத்திலேயே அந்த பெண் உயிரிழக்க அடுத்தடுத்து இரட்டை குழந்தைகளும் பரிதாபமாக பலியாகின.

தமிழ் பெண்ணிடம் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் பிரசவ சிகிச்சை அளிக்க மறுத்து அவரும் இரட்டை குழந்தைகளுடன் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.