துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதன்பிறகு 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாட்டிலும் சிரியாவிலும் நேற்று மட்டும் மொத்தம் 2300 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் பலி எண்ணிக்கை 1500 ஆக உள்ளது. சிரியாவில் பலி எண்ணிக்கை 800 ஆக உள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை ஐரோப்பிய ஒன்றியம் மீட்பு படையினரை அனுப்பியுள்ளது. இந்தியத் தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.