கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குருவங்கட் என்ற இடத்தில் மனக்குளங்கரை பகவதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு, யானைகள் அழைத்து வரப்பட்டன. ஆனால், வாணவேடிக்கை, பட்டாசு சத்தம் அதிகமாக இருந்ததால், 2 யானைகள் மிரண்டு ஓடின. இரண்டு யானைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
பின்னர், இதில் ஒரு யானை திடீரென, பக்தர்கள் நின்று கொண்டிருந்த பகுதியை நோக்கி ஓடியது. அப்போது, நிகழ்ந்த சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த யானைகளை அரை மணி நேரத்திற்கு பிறகு பாகன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். யானை தாக்கியதில் லீலா (வயது 65), அம்முகுட்டி அம்மா (70) மற்றும் ராஜன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 8 பேர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது யானை முட்டியதில், கோயிலின் நிர்வாக அலுவலக கட்டிடமும் இடிந்து விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோயிலாண்டி நகராட்சி துணை சேர்மன் கே சத்யன் கூறுகையில், யானை தாக்கியதில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது” என்றார்.