பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நேற்று பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. இதில் ஆங்காங்கே மின்னல் தாக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல், பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு முதல்வர் நிதிஷ்குமார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தாண்டு பிப்ரவரியில் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பீகார் பொருளாதார கணக்கெடுப்பு (2024-25) அறிக்கையின்படி, 2023இல் மின்னல் அல்லது இடியுடன் கூடிய மழையால் 275 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை மற்றும் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : புரூஸ் லீயுடன் மிரட்டிய பிரபல வில்லன் நடிகர் மெல் நோவாக் காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!