சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து குறை நிவர்த்தி பெறலாம்.
இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றையும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படிமேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம்.