மளிகை கடையில் கடன் பாக்கியை திருப்பி கேட்டதால் மளிகை கடைக்காரர் கண் பார்வையை இழந்துள்ள சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
பீகார் மாநிலம் நாளந்தா அருகே உள்ள மெஹனூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஜிதேந்திர குமார். தன் தந்தைக்கு உதவியாக அவரது மளிகை கடையை கவனித்து வந்தார். சம்பவம் நடந்த நாளன்று பக்கத்து கிராமத்தைச் சார்ந்த முராரி குமார் என்பவர் சிகரெட் வாங்குவதற்காக இவரது கடைக்கு வந்திருக்கிறார். முராரி குமார் ஏற்கனவே வாங்கிய பொருள்களுக்கு செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருந்ததால் அதனை திருப்பி செலுத்தாமல் சிகரெட் தர மாட்டேன் என கண்டிப்புடன் கூறியிருக்கிறார் ஜிதேந்திர குமார். இதனால் ஆத்திரமடைந்த முராரி குமார் ஜிதேந்தரை மீறி கடைக்குள்ளிருந்து சிகரெட்டை எடுக்க முயற்சித்திருக்கிறார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்தது. இதில் ஆத்திரமடைந்த முராரி குமார் கடையிலிருந்த கத்தியை எடுத்து ஜிதேந்தரின் இடது கண்ணில் பலமாக குத்தி விட்டு தப்பிச் சென்றார். இரத்த வெள்ளத்தில் கிடந்த ஜிதேந்தரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிதேந்தர் குமாருக்கு இடது கண் பார்வை முற்றிலுமாக பறிபோனது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜிதேந்தர் குமாரின் தந்தை மெஹனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தப்பிச்சென்ற முராரி குமாரை காவல்துறை வலை வீசி தேடி வருகிறது.