சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி வசூல் (சரக்கு மற்றும் சேவை வரி) ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.1 லட்சம் கோடியை தொட்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டு வரி விதிப்புக்குப் பிறகு இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில் ” மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 2024 ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ. 2.10 லட்சம் கோடியை எட்டியது… பணத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, ஏப்ரல் 2024க்கான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.92 லட்சம் கோடியாக உள்ளது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 12.40 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது ” தெரிவிக்கபட்டுள்ளது.
ஜிஎஸ்டி வருவாயில் இதுவரையில் இல்லாத வகையில் அதிகபட்ச மாதாந்திர வசூலாக ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் கடந்தாண்டு (2023) ஏப்ரல் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி தொகையை விட இந்தாண்டு கிடைத்த வருமானம் 12.40 சதவீதம் அதிகம் ஆகும். கடந்தாண்டு ஏப்ரலில் ரூ.1,87,035 கோடி வசூலான நிலையில், இந்த ஏப்ரல் மாதம் ரூ.2,10,267 கோடி வசூலாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.12,210 கோடி வசூலாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.