அதானி வில்மர் நிறுவனத்தில் ஜிஎஸ்டி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் விவகாரத்தால் பங்குச்சந்தையில் சரிவை சந்தித்து வந்த அதானி குழுமம், கடந்த 2 நாட்களாக 2 வர்த்தக பிரிவுகளில் ஏற்றத்தை கண்டது. இந்நிலையில் தான் அதானி குழுமத்தின் மற்றொரு விதிமீறல் செயல்பாடாக, அதானி வில்மர் குழுமத்தில் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய தகவல்படி, இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் குழுமத்தில், மாநில கலால் வரித்துறையினர் சோதனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதானி வில்மர் குழுமம் கடந்த 5 ஆண்டுகளாக ஜிஎஸ்டி விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பாக அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் அறிவித்துள்ள தகவலின் படி, அதானி வில்மர் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையானது ஜிஎஸ்டியை சரிவர கட்டாமல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதால் நடத்தப்பட்டதாகவும், சோதனையின் போது வில்மர் குழுமத்தின் மாநில அளவிலான உள்ளீட்டு வரிக்கடன் தொடர்பான தகவல்கள் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் பரிசோதனை முடிவடைந்த நிலையில், அதுதொடர்பாக எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என கூறப்படுகின்றன. ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கைக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்ததால் அதன் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த சர்ச்சைகளை தொடர்ந்து அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ், அதானி வில்மர், அதானி போர்ட்ஸ் மற்றும் பிற நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.