வந்தவாசி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசீலன் உடல்நலக்குறைவால் காலமானார்.
திமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்ட வந்தவாசி தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை தோற்கடித்து அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. அப்போது, வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றவர் தான், குணசீலன்.
இவர், அப்பகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால், மக்களின் பேராதரவை பெற்றிருந்தார். இதற்கிடையே, இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கழகத் தலைமையின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர். கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் திறம்பட செயலாற்றியவர். சகோதரர் குணசீலன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.