நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரணத் தொகை பெற இன்று (ஜனவரி 3) தான் கடைசி நாள் என்பதால், டோக்கன் பெற்றவர்கள் இன்று நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைகளின் அடிப்படையில், அதிக பாதிப்புள்ள பகுதிகளுக்கு 6,000 ரூபாயும், மற்ற பகுதிகளுக்கு 1,000 ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதற்காக 220 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 92% நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரண தொகையை பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் டோக்கன் பெற்றவர்கள், இன்று கட்டாயம் நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.