ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வரி ஏய்ப்பு, போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது. 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக அனைவரும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூன் 30) நிறைவடைவதால், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள், ரூ.1,000 அபராதம் செலுத்திய பிறகே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணைக்காத பட்சத்தில் நாளை முதல் பான் கார்டு எண் செயல்படாது. மேலும், செயல்படாத பான் கார்டு எண்ணை வைத்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
டிடிஎஸ் பிடித்தம் மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் விகிதம் அதிகரிக்கப்படும். வங்கி ஆவணங்களுக்கு பான் எண் அத்தியாவசியம் என்பதால், வங்கிக் கணக்கை திறக்கவும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். மேலும், புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பெற முடியாது. பாஸ்போர்ட் பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என்பதால் வெளிநாடு பயணம் செல்ல முடியாது.