Gyanesh Kumar: தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமார், இன்றுடன் ஓய்வு பெறவுள்ளநிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் பிப்.18 இன்றுடன் முடிவடைகிறது. இதனால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு (பிப்ரவரி 17 ) திங்கள் கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் குழுவில் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் இடம்பெற்றனர். இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவர் பிப்.19ம் தேதி முதல் தனது பதவியில் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானேஷ் குமார் யார்? தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆவார். இந்தச் சட்டத்தின் கீழ், தேர்தல் அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தலைமை நீதிபதிக்குப் பதிலாக உள்துறை அமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தில் பதவி வகிப்பதற்கு முன்பு, ஞானேஷ் குமார் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு கேரளப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அவர் ஜனவரி 31, 2024 அன்று ஓய்வு பெற்றார். ஞானேஷ் குமார் ஒரு கேரள கேடர் அதிகாரி. அவர் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். அதேபோல 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலாளர், உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் மற்றும் கூடுதல் செயலாளர், நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தில் செயலாளர் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளர் போன்ற பதவிகள் இதில் அடங்கும். அவர் ஐஐடி கான்பூரில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அவர் ICFAI-யில் வணிக நிதி மற்றும் HILD, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தையும் பயின்றார்.
முன்னதாக, ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றியுள்ளார். ஆகஸ்ட் 2019 இல் பிரிவு 370 நீக்கப்பட்ட நேரத்தில், அவர் அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்தில் காஷ்மீர் பிரிவில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், 2020 இல் அவர் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கம் உட்பட, அயோத்தி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆராய உள்துறை அமைச்சகத்தில் ஒரு குழுவிற்கும் அவர் தலைமை தாங்கினார்.