காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, ஜனவரி 19 முதல் நடைமுறையில் இருந்த பலவீனமான போர்நிறுத்தம் முறிந்ததை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டார், இது நடந்து வரும் மோதலில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
ஹமாஸ் போராளிக்குழுவின் மூத்த அரசியல் தலைவரும் பாலஸ்தீன நாடாளுமன்றத்தின் உறுப்பினருமான சலாஹ் பர்தாவில் (வயது 65) மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு இன்று (மார்ச் 23) அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹமாஸின் முக்கிய கூட்டாளிகளாகக் கருதப்படும் யேமன் நாட்டைச் சேர்ந்த போராளிக்குழுவினர் இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.
இதனால், அந்நாடு முழுவதும் அபாய சங்கு ஒலித்த நிலையில் அந்த ஏவுகணையைத் தகர்த்துவிட்டதாகவும் அதனால் எந்தவொரு உயிர் மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என இஸ்ரேல் நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) உத்தரவிடப்பட்டுள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. காசாவில் ஒரு இராணுவப் படையாகவும் ஆளும் அமைப்பாகவும் இருந்த குழுவை கலைக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இனிமேல் இராணுவ வலிமையுடன் செயல்படும்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.