வேலையில்லாத இளைஞர்கள், பெண்களுக்கு கைத்தறி தொழிலை கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (Young Weavers Induction and Entrepreneurship Programme for Youngsters ) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு 04.08.2023-ல் ஆணை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனைவோர்களாக உருவாக்குதல், பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது, கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல், வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.
2023-24-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல், கைத்தறி நெசவில் நெசவுத் தொழில்நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல், இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படவுள்ளன . பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இப்பயிற்சிக்கு சேர வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை, கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும், எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in என்ற இ ணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும். இது தொடர்பாக 11.09.2023 அன்று ஏ.என்.எச்.8 ஸ்ரீ கௌரியம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 31/1, ஆசாரி சந்து, நாகல்நகர், திண்டுக்கல் 624 003 என்ற முகவரியில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.