வீட்டின் வாயிலில் எலுமிச்சம் பழமும், பச்சை மிளகாயும் சேர்த்து கோர்க்கப்பட்ட கயிறு கட்டப்படுவது எதற்கு தெரியுமா? சிலர் திருஷ்டி கழிக்க என்கிறார்கள். ஆனால், அது உண்மையில் திருஷ்டிக்காக அல்ல. நம் முன்னோர்கள் எதையும் காரண, காரியத்துடன்தான் செய்திருக்கிறார்கள். எலுமிச்சையும், பச்சை மிளகாயும் வைட்டமின் சி சத்து நிறைந்தவை. இதனை நூலில் கோர்த்துக் கட்டும்போது, அதில் இருக்கும் சாறு நூலில் இறங்கி காற்றில் பரவும்.
இதனால் காற்றில் உள்ள கிருமிகள் வீட்டுக்குள் வருவது தடுக்கப்படும். விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவதும் இதே லாஜிக்கில்தான். வேப்பிலையை வீட்டு முகப்பில் சொருகி வைப்பதும் கிருமிகளை தடுக்கும் ஒரு முறைதான். வீட்டு வாசலில் காலையில் சாணம் கரைத்து தெளித்து கோலம் போடுவதும், ஈக்களை விரட்ட மஞ்சளைக் கரைத்துத் தெளிப்பதும் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, பாதிப்புகள் அற்ற கிருமி நாசினிகளாகும்.
மழைக்காலத்தில் துணிகள் நமுத்தாற்போல் இருக்கிறதா? பீரோவில் 4 சாக்பீஸ் துண்டுகளை நான்கு மூலைகளிலும் போட்டு வைத்தால் அப்படி இருக்காது. கிச்சனிலோ அல்லது டைனிங் டேபிளிலோ ஈ தொல்லை உள்ளதா? அப்படி இருந்தால் கறிவேப்பிலை அல்லது புதினாவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு கசக்கி ஒரு ஓரமாக போட்டு வைத்தால் ஈ தொல்லை இருக்காது. பிரிட்ஜில் ஏகப்பட்ட பொருட்கள் வைத்து, திறக்கும்போது கெட்ட வாடை அடிக்கிறதா? ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.
அதேபோல், வீட்டில் நல்ல சாம்பிராணி புகை போட, நோய் கிருமிகள் அண்டாது. வேப்பிலையை காய வைத்து அதோடு சிறிது கற்பூரம் கலந்து மாலை நேரங்களில் புகை போட, கொசு மற்றும் கிருமிகளின் தாக்கம் வீட்டில் இருக்காது. ஒரு அகல் விளக்கில் வேப்பெண்ணை விட்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க அந்தப் புகை வீடு முழுவதும் பரவி நோய்க்கிருமிகளை அழிக்கிறது. மேலும், சுவாசப் பிரச்சனையும் தீர்த்துவிடும். இதேபோல், துளசி இலைகளையும் காய வைத்து அதனையும் புகை போட்டு விட, உடலில் நோயின்றி வாழலாம்.