தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் தனிமனித பரவலாக தான் உள்ளது சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு முன்பே சுற்றுப்புறத்தில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவார்கள். காவல்துறையினர் அபராதம் விதித்து தான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை. முகக்கவசம் அவசியம் என்பதை பொது மக்கள் அறிந்து செயல்பட வேண்டும். நம்மை காத்துக் கொள்ள நல்ல வழி முகக்கவசம் போடுவது. அதனை பின்பற்றுங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா தொற்று சமூக பாதிப்பாக மாறவில்லை. தற்போது வரை தனி மனித பாதிப்பாக தான் இருக்கிறது. குடும்பம் முழுக்க பாதிக்கப்படுவது என்று இல்லை. தொற்று பாதிக்கப்படுபவர்களும் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட வேண்டிய சூழல் எதுவும் ஏற்படவில்லை. அதனால் பயம் கொள்ள தேவையில்லை. வரும் 10, 11ஆம் தேதிகளில் மத்திய அரசு சார்பில் மருத்துவ கட்டமைப்பு தயாராக இருக்கிறதா? என்று ஒரு திட்டத்தை தொடங்க சொல்லி இருக்கிறார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளோம் என்று கூறினார்.