ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
சென்னை கிழக்கு சாலையில் உள்ள பனையூருக்கு அருகே ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2,000 முதல் ரூ. 15,000 வரை டிக்கெட் பதிவு நடைபெற்றது. டிக்கெட்டை பெற்றுக் கொண்ட ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். ஆனால், சரியான பார்க்கிங் வசதி செய்யப்படாததால் பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னே, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேபோல ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை எனவும் கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியதாகவும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு குற்றம்சாட்டி வருகின்றனர். பல மணிநேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒருவழியாக உள்ளே வந்தபோதும் டிக்கெட் இருந்தும் இருக்கைகள் கிடைக்கவில்லை என ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏசிடிசி ஈவண்ட் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியில் எதிர்பார்க்காத அளவுக்கு வந்த ரசிகர் கூட்டத்தால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. அதிகமான மக்கள் கூடியதால் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக கலந்து கொள்ள இயலாத ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான முழுப் பொறுப்பை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.