கடந்த வாரம் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்த கூகுள் நிறுவனம் ஆயிரம் பணியாளர்களுக்கு, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் சென்ட்ரல் இன்ஜினியரிங் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய பிரிவுகளில் பணியாற்றியவர்களுக்கு இந்தப் பணி நீக்கத்திற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு இமெயில் அனுப்பி இருக்கும் கூகுள் நிறுவனம் இது போன்ற கடினமான முடிவுகளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கான ஊதியம் விரைவில் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவானாக விளங்கும் கூகுள் தங்களது ஊழியர்களின் பணி நீக்கம் தொடர்பான இமெயிலில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வேறு துறைகளில் இருக்கும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருக்கிறது கூகுளின் மற்ற துறைகளிலும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் ஏப்ரல் மாதம் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த நிறுவனத்தின் கூகுள் அசிஸ்டன்ட், ஹார்டுவேர் மற்றும் கோர் இன்ஜினியரிங் துறைகளில் பணி நீக்கம் செய்ய இருப்பதாகவும் அறிவித்திருந்தது. கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய கெவின் போர்ரிலியன் என்ற மூத்த மென்பொருள் பணி நீக்கம் செய்யப்பட்ட தனது அனுபவத்தை ‘X’ வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் ” கடந்த 19 வருடங்களாக கூகுள் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய டீமில் பணி நீக்கம் செய்யப்பட்ட 16 பேரில் நானும் ஒருவன். எனினும் இந்தப் பணி நீக்கத்தை நான் நேர்மறையாகவே அணுகுகிறேன். தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் என்னுடைய நலனில் அக்கறை செலுத்தவும் இது உதவும்” என தெரிவித்திருக்கிறார். கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்வது இது முதல் முறையல்ல. கடந்த வருடம் ஜனவரி மாதம் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 12,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.