தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் மூலம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு தேவையான அரிசி முழு மானியத்திலும், பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை ஆகியவை குறைந்த விலையிலும் மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை குறியீடுகளுடன் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக விண்ணப்பித்தோருக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தது. குடும்ப அட்டையை தொலைத்தவர்களும் நகல் அட்டைக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்று வருகின்றனர். இதற்கிடையே, குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. நகல், குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தோர், முகவரி மாறி புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தோருக்கும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் நகல் குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தோர், முகவரி மாற்றம் கோரி விண்ணப்பித்தோருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட்ட புதிய குடும்ப அட்டையில் பொருளாதார அடிப்படையில் பெரும்பாலும் NPHH குறியீட்டுடன் முன்னுரிமையற்ற குடும்ப அட்டையாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையில் வறுமையில் உள்ளவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. அதே போல் குடும்ப அட்டை இல்லாததால் சாதி, இருப்பிடம், வருமானச்சான்றுகள் பெறுவதிலும் சிக்கல் தொடர்வதாக கூறப்படுகிறது.