தைத்திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் 2023 ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டாகியும் இன்னும் வரவில்லை. குடும்ப அட்டை என்பது மிக அவசியம் என்பது மட்டுமின்றி, அது தான் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான அடிப்படை ஆவணம் ஆகும். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த உடன், விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.