ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் 2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் அட்டைகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் சிம் கார்டு, பான் கார்டு, மின் இணைப்பு, வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு போன்ற அனைத்து விஷயங்களுக்கு ஆதார் கார்டை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் கார்டை இணைக்காவிட்டால் அரசின் உதவிகள் கிடைக்காமல் போகும் என்பதால் மிக முக்கியமாக வாக்காளர் அடையாள அட்டையிலும் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலர் இணைக்காமல் உள்ளதால், ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி, பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க மத்திய அரசு வழங்கிய கால அவகாசம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தநிலையில், சில நிபந்தனைகளுடன் காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டின் இறுதிக்கெடுவுக்கு முன்பாக இணைக்காதவர்கள் ஆன்லைன் மூலம் ரூ.1000 அபராதம் செலுத்தி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும் இதையும் செய்ய தவறும்பட்சத்தில் 2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் அட்டைகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் கார்டுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகள் முடக்கி வைக்கப்படும். நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு அறிக்கைகளும் பரிசீலனை செய்யப்படாது. இதுகுறித்து இந்திய வருமான வரித்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வருமான வரிச் சட்டம் 1961இன் படி, அனைத்து பான் அட்டை வாடிக்கையாளர்களும் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக, அதை ஆதார் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும். சிறப்புச் சலுகையாக விலக்கு பெற்றவர்களுக்கு மட்டும் இந்தக் கெடு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.