டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் இப்போது மிகவும் வளர்ந்துவிட்டது. ஷாப்பிங் செய்வது, கட்டணம் செலுத்துவது, பணம் அனுப்புவது, டிக்கெட் புக்கிங் செய்வது என எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது. இது ஒருபுறம் வளர்ச்சியாகப் பார்க்கப்பட்டாலும் இன்னொரு புறம் இதன் மூலம் நிதி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பொதுவாக, பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அவசியம். பான் கார்டை வைத்து நிதி பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன.
பான் கார்டு என்பது வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டில் உள்ள தனிப்பட்ட எண் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேறுபட்டது. இந்த பான் கார்டு நகல் நிறைய இடத்தில் கேட்கப்படுகிறது. சிலர் அதை எங்கெல்லாம் கொடுத்தோம் என்று கூட ஞாபகம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்கு பான் கார்டு விவரங்களை நிறைய இடங்களில் கொடுத்திருப்பார்கள். அப்படி நீங்கள் கொடுக்கும் உங்கள் பான் கார்டு மோசடிக்கும் பயன்படுத்தப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய சூழ்நிலையில் உங்கள் பான் கார்டை யாராவது பயன்படுத்தினால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது? அதைத் தடுக்க முடியுமா?
கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்ப்பதன் மூலம் ஒரு பயனர் தன்னுடைய பான் எண் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை அறிய முடியும். உங்களுடைய பான் கார்டில் வேறு யாராவது கடனைப் பெற்றிருக்கிறார்களா என்பதை அறிய, பயனர் பெயர், பிறந்த தேதி மற்றும் அவரது பான் கார்டு விவரங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். அவ்வாறு உங்களுடைய பான் கார்டைப் பயன்படுத்தி எங்காவது கடன் வாங்கியது தெரியவந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளிக்கலாம்.