இந்தியா பங்கேற்கும் சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் உள்நாட்டு நிகழ்ச்சிகளில், நம் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக, ‘பாரத்’ என்றே கடந்த சில மாதங்களாக குறிப்பிடப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு பெயர்களும் இடம்பெற்றுள்ளதால், பாரத் என்ற பெயரை பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என, மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் கூகுளின் மேப் இணையத்தில், பாரத் என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு தேடினால், இந்திய நாட்டின் வரைபடம் மற்றும் தேசியக்கொடியுடன் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் மொழியியல் நிலப்பரப்புக்கு ஏற்றவாறு, கூகுள் மேப்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை சத்தமில்லாமல் செய்துள்ளது.
அதே போல கூகுள் நியூஸ் தளத்திலும் பாரத் என டைப் செய்து சர்ச் செய்தால் இந்தியா என்பதற்கான விபரங்களை காட்டுகிறது. இதன் மூலம் கூகுள் சேவை தளம் அனைத்தும் இந்தியா – பாரத் இரண்டும் ஒன்றுதான் என்று கூகுள் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதேபோல் ஹிந்தி மொழியில் इंडिया என்ற சொல்லுக்கு இணையாக भारत என்பதை ஏற்க துவங்கியுள்ளது. இதேபோல் ஹிந்தியில் இந்தியாவுக்கு இணையான சொல்லாக ஹிந்துஸ்தான், இந்தியாவர்ஷ் ஆகிய சொற்கள் காட்ட துவங்கியுள்ளது கூகுள்.
நீங்கள் உங்களது மொபைல் போனை எடுத்து கூகுள் தேடலுக்கு சென்று பாரத் என டைப் செய்தால் இந்திய கொடியுடன் இந்தியா ஒரு தென்னாசிய நாடு என்றும், இந்தியா குறித்த விபரத்தை உங்களுக்கு காட்டும். முன்பு பாரத் என டைப் செய்தால் பாரத் தொடர்பான செய்திகளையும், அதை சார்ந்த விஷயங்களை மட்டுமே காட்டும். இப்புதிய அப்டேட் மூலம் பாரத் என டைப் செய்தால் இந்தியா என காட்டுகிறது.