இன்றளவிலும் மிக நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் என்றால், அது நகைக்கடன் தான். இது ஆபரணமாக மட்டுமல்லாமல், பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு நண்பனாக இருக்கிறது. நினைத்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால் அது நகைக்கடனில் தான் கிடைக்கும். மற்ற கடன்களுக்கு பல விதிமுறைகள், ஆவணங்கள் தேவைப்படும் என்றாலும், நகைக்கடனுக்கு அதெல்லாம் தேவையில்லை.
இந்நிலையில், தான் இந்திய ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது நகைக் கடன் வாங்கியிருப்பவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நகைக்கடனுக்கு வட்டி மட்டுமே செலுத்தி வந்து, கால அவகாசம் ஓராண்டு அல்லது ஆறு மாதங்களுக்குள் நிறைவு பெற்றதும், ஒரே நாளில் அதனை மறு அடமானம் வைக்கும் வசதி இருந்தது. இதனால், நகைக்கடன் வாங்குவோருக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது.
ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைப்படி, வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள், அதன் அவகாசம் முடிந்ததும் மொத்த பணத்தையும் கொடுத்து நகையை மீட்டுக்கொண்டு, மீண்டும் புதியது போலத்தான் அடகு வைக்க முடியமாம். அதுவும் மறுநாள் தான் அடகு வைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. கடன் வழங்குவதில் உள்ள வெளிப்படைத் தன்மையையும், பிரச்சனைகளையும் களைவதற்காகவே இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு சவரனுக்கு வங்கிகள் கொடுக்கும் கடன் குறைவு என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இனி வங்கிகளில் நகைக் கடன் வைப்பவர்களின் எண்ணிக்கையும் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.