நம்ம சென்னை, நம்ம பெருமை என்ற உணர்வுடன் சென்னை தினத்தைக் கொண்டாடி வருவதாகத் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் 2020, 2021, 2022ஆம் ஆண்டுக்கான தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அப்போது, 2020ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முனைவர் ராசேந்திரன் பெற்றுக் கொண்டார். 2021ஆம் ஆண்டுக்கான விருதை முனைவர் நெடுஞ்செழியனும், 2022ஆம் ஆண்டுக்கான விருதை ழான் லூய்க் செவ்வியாரும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், தாம் மேயராக இருந்தபோது மெட்ராஸ் என்ற பெயரைச் சென்னை என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மாற்றியதைச் சுட்டிக்காட்டினார். சிங்கார சென்னையின் 383வது பிறந்த நாளை இன்று ‘நம்ம சென்னை, நம்ம பெருமை’ என்று உணர்வுப்பூர்வமாக மக்கள் கொண்டாடி வருவதாகக் கூறிய அவர், தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அரசு திமுகதான் எனப் பெருமையுடன் தெரிவித்தார். இதேபோல், 3 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழுக்குச் செம்மொழி என்று தகுதி பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான் என அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ”பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்றைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்குச் சென்னை ஒரு ரோல் மாடல். இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறையச் சம்பவங்களைச் செய்யப் போறோம். காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.